திங்கள், 19 மார்ச், 2007

கடவுளின் நிறுவனம்

குடிப்பதற்கு ஓரளவு மதுவும்
கடிப்பதற்கு ஒரு துண்டு இறைச்சியும் கிடைத்துவிட்டால்
புணர்ச்சிக்கு வீடு திரும்பிவிடுகிறான் கவிஞன்
சமைப்பதற்கும் உறங்குவதற்கும்
சொந்தமற்ற நான்கு சுவர்களைக் கொண்டிருக்குமவன்
அதிலிருந்து வெளியேரும் நீண்ட கால்களால்
உலகத்தை விரித்துக்கொண்டு போகிறான்
அவன் கண்கள்செல்வச் செழிப்புள்ள
கருவூலங்களை ஊடுருவிச் சென்று
அப்பாலுள்ள நிலவை இலவசமாய்ப் பகிர்ந்து நிற்கிறது
கவிஞன் கரைமீது நடக்கும்போது
பசித்தவர்களின் பேரோசைகளையே கற்பிதம் செய்கிறான்
விளிம்பில் நின்று நிலத்தை அதட்டும் அவன் குரலால்
மிச்சமான பண்டங்கள் யாவும்
வெளியில் தெறித்து விழுகின்றன
அவன் சிரித்துக்கொள்கிறான்
இந்த கடவுளின் நிறுவனத்தில்
வெலை மறுத்தும் விசுவாசமற்றும் அவன் திரிவதுவேடிக்கையானது மட்டுமல்ல விபரீதமானதும்தான்
உழைப்பவர்கள் தங்கள் வயிற்றை காட்டும்போது
அந்தப் பைத்தியக்காரன் தற்கொலை செய்துகொள்ளும்படி
அவர்களுக்கு ஒரு ஆழ்ந்தபள்ளத்தாக்கையல்லவா
முன்மொழிகிறான்
அப்படித்தான் இரண்டு கை நிறைய
புளியவிதைகளைக் கொடுத்துவிட்டு
ஒரு இறக்குமதி பானத்தைக் கேட்டு அடம்பிடித்ததும்
சற்றே ஏமாற்றுக்காரனைப்போல் தென்படும் அவனுக்கு
நீங்கள் ஏதேனும் அறிவுரை கூற முயலும்போது
உங்களிடம் ஓரளவு மதுவும்
ஒரு துண்டு இறைச்சியும்
உபரியாக இருந்தால் தொலைத்துவிட்டுப் பேசுவதுதான்
சிறந்த உபாயம்
பிறகு அவனிடம்
உதவாக்கரைகளுக்காக
கடவுள் தன் நிறுவனத்தை திறந்து போடுவாரா
என்று கேளுங்கள்
போடமாட்டார் என ஒப்புக்கொள்வான்
-யவனிகா சீறிராம்


கடவுளின் நிறுவனம் என்ற தொகுப்பிலிருந்து

1 கருத்து:

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in